ஊழல் மோசடி, இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதற்கு ஒரு போதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை போகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்றிற்காக வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
ஊழல் மோசடி இலஞ்சம் அதிகார துஸ்பிரயோகம் ஒழுக்க வழு மனித உரிமை மீறல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்படும் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.
மேற்படி விரோதமான போக்கில் செயற்பட்ட கடந்த கால காட்டாட்சியினைத் தோல்வியடையச் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுடன் இணைந்து செயற்பட்டதை அறியாதவர்கள் இருக்க முடியாது.
விரோத குரோத போக்குடைய அரசியல் வாதிகளை மட்டுமல்லாமல் இவ்வாறான போக்குடைய அதிகாரிகள் நிருவாகிகள் வகுப்புவாதிகள் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தே வருகின்றது.
எனவே மட்டக்களப்பிலுள்ள ஊழல் மோசடிகள் கையூட்டுகள் துஸ்பிரயோகங்கள் செய்கின்ற எந்த நபரையும் நாம் எதிர்த்தே வருகின்றோம்.
அப்படியானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்தவர்களை மக்கள் கடந்த காலத்தில் நிராகரித்து விட்டதை யாமறிவோம்.
ஊழல் மோசடிக்காரர்களுக்கு முண்டு கொடுக்கின்றவர்கள் வக்காலத்து வாங்குகின்றவர்களை நாமும் எமது மக்களும் மன்னிக்கவே மாட்டோம்.
சிலரைச் சில நாட்கள் ஏமாற்றலாம் பலரைப் பல நாட்கள் ஏமாற்றலாம் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழல்கள் வாதிகள் உணர்ந்தாக வேண்டும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் தாமும் ஊழல்கள் செய்து மற்றவர்களையும் ஊழல் செய்யத் தாரளமாக அனுமதித்தனர்.
விளைவாகக் கடந்த கால ஆட்சியாளர்கள் மக்களால் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் அவர்களோடு இணைந்து ஊழல் புரிந்த பலர் தப்பிப் பிழைத்து வருகின்றனர்.
எந்தக் கொம்பர் ஊழல் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கௌரவமாக வரவேற்கின்றோம்.
கடமை, கண்ணியம், தட்டுப்பாடுடைய ஊழல்வாதிகளை யாரும் அனுமதிக்கவே முடியாது.
மேலும், ஊழல் மோசடிகளால் ஏற்பட்ட கறைகளைக் கண்ணீரால் கழுவி விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.