அமைச்சரவை மாற்றம்! பரபரப்பான நாளைய அமர்வில் முடிவை அறிவிப்பார் முதல்வர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணை அறிக்கை விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளார் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

இதனைக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் இருவர் உறுதிப்படுத்தினர்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் வினவியபோது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பில் எனக்குத் தெரியாது. எனினும், எனது நிலைப்பாடு என்னவென்று முதலமைச்சருக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரம் தொடர்பில் மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்து அவர்களின் கருத்துகளையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டறிந்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த விசாரணைக் குழுவினர், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தனர். விசாரணை அறிக்கையை கடந்த 7ம் திகதி சபையில் முதலமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.

அமைச்சர்களின் தன்னிலை விளக்கம் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டுத் தானே இறுதிமுடிவு செய்வேன் என்றும் முதலமைச்சர் சபையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான சிறப்பு அமர்வு நாளை புதன்கிழமை வடக்கு மாகாண சபையில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினமும் நேற்றும் நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்துப் பேசியுள்ளார்.

இது தொடர்பில் தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன என்று முதலமைச்சர் வினவிய போது ஒவ்வொருவரும் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்கள்.