மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடைவிதித்தது நாட்டிற்கு அவமானம்: சீமான் பேட்டி

கோவில்பட்டி காந்தி மைதானம் அருகேயுள்ள ரதவீதியில் நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொணடு பேசியதாவது:-

நாம் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்ற பயம் எழுந்துள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. ஓடும் நீரை கூட ஆழ்துளை கிணறு போட்டு தான் குடிக்க வேண்டும், ஆனால் இன்றைக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் வழங்கும் அவல நிலை. மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. குடிக்க தண்ணீர் இல்லை, உணவிற்கு வழி இல்லை, காருக்கு வழி இருக்கு, செல்போனுக்கு வழி இருக்கு, எல்லாத்திற்கும் திட்டம் இருக்கு. ஆனால் 130கோடி மக்களுக்கு குடிக்கும் தண்ணீருக்கும், உணவிற்கும் திட்டம் இல்லை.

அதனால் தான் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் அழிவு தான் இதற்கு காரணம். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் வாக்காளர்களாக மட்டுமே உள்ளீர்கள். திட்டமிட்டு இந்தியை திணித்து வருகின்றனர். இந்தியை படியுங்கள், ஆனால் வேலைக்கு வெளிமாநிலங்களுக்கு செல்லுங்கள்.

தமிழகத்தில் தமிழ்படித்தால் மட்டுமே வேலை. ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் தேவையில்லை. சிலர் மாற்றத்தினை விரும்புபவர்கள் ரஜினி பக்கம் வாருங்கள் என்று கூறுகின்றனர்.

அவருடன் நடிக்கத்தான் போகவேண்டும். மாற்றம் என்பது அடிப்படை அரசியல் மாற்றம். இவையெல்லாம் கேட்ட பிறகும் அ.தி.மு.க, தி.மு.க தொடர்ந்து வாக்களிக்கும் நிலை. இங்கு தலைவர்கள் இல்லை என்று கர்நாடகாவில் இருந்து தலைவர்களை அழைத்து வரும்நிலை.அதோடு தண்ணீர் வந்தால் நான் சென்று விடுகிறேன் என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற வைகோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது தனி மனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, நமது நாடு, நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அ.தி.மு.க அரசு அல்ல. பா.ஜ.க அரசு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களான உணவுப் பாதுகாப்பு, மீத்தேன், ஜி.எஸ்.டி., நீட்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

கட்சியை ஆரம்பிக்காமலேயே முதல்வராக வருவாரா என கருத்து கணிப்பு நடத்துவது எவ்வாறு எனத் தெரியவில்லை. ரஜினி அரசியல் தலைவராக வரலாம். ஆனால் அந்தந்த மண்ணின் மைந்தர் மட்டுமே முதல்வராக வர வேண்டும்.

தமிழகத்தில் நான் முதல்வரானால் தமிழில் படிப்பவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை. பிற மொழி படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தால் வேலை வழங்கப்படும். இல்லையென்றால் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். தேர்தலை நடத்தும் போது தேர்தல் ஆணையம் வாகன சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது. அந்தப் பகுதியை முழுவதுமாக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிலம் இல்லை என்று சொல்லுவது வேடிக்கையான ஒன்று. மருத்துவ படிப்பில் கிராம மாணவர்கள் இடம்பெறுவது கேள்விக்குறியாகி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குக்காக மத்திய அரசு மௌனம் காக்கிறது. மேலும், 2019 வரை தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நீடிக்கும். மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதே பா.ஜ.க.வின் திட்டம். அதுமட்டுமல்ல, ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து,  அவருடன் கூட்டணி சேர பா.ஜ.க திட்டம் வகுத்துள்ளது. மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்க முயற்சிக்கிறது.

இவ்வாறு கூறினார்.