இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபட வைக்கும் இறைவழிபாடு

நாம் வாழ்கின்ற யுகம், கலியுகம். எதிர்ப்புகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியில் பலருக்கும் வாழ்க்கை அமைகின்றது. ‘நிம்மதி’ என்பது இல்லாமலேயே வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடுகிறது. செயற்கையாக மனிதன் உருவாக்கிக் கொண்ட சில காரியங்களே அவனுக்குச் சிக்கல்களைக் கொடுக்கின்றன.

இதற்கிடையில் அவ்வப்போது உண்டாகும் இயற்கை சீற்றங்களும், திடீர், திடீரென பூமியைத் தாக்குகின்றன. அதாவது பூமியில் வாழ்வோரை அமைதி இழக்க வைக்கின்றன.

இயற்கை சீற்றத்தால் புயல் உருவாகி வீடுகளைச் சேதப்படுத்துவதும், நெருப்பால் நினைக்க இயலாத அளவு வளர்ச்சியடைந்த தொழிற்சாலைகள் அழிவதும், நிலநடுக்கத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதும் இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இதிலிருந்து அகல என்ன வழி என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இதற்காகவே பஞ்ச பூத ஸ்தலங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பது பஞ்சபூதங்களாகும். ‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது’ என்பது பழமொழி. கிணற்றில் இருந்து பூதம் வருவதாக நினைக்கக் கூடாது. பஞ்ச பூதத்தில் நிலம் என்ற பூதத்தை வெட்டி எடுக்கும் பொழுது நீர் என்ற பூதம் வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட இயற்கை சக்திகளால் இடர்பாடுகள் ஏற்படாமல் காக்க ஏற்ற ஸ்தலங்களைக் கண்டு வழிபட்டால் நமது வாழ்வில் வளர்ச்சி கூடும். கவனத்தை நாம் சிவன் மீது செலுத்தினால், புவனத்தில் வாழ போதிய பாதுகாப்பு நமக்குக் கிடைக்கும். பஞ்ச பூத ஸ்தலங்கள் எவை, எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பூமிக்குரியது – காஞ்சீபுரம், அன்னை பராசக்தி காஞ்சீபுரத்தில் மண்ணால் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டாள். சிவபூஜை புரிந்த காமாட்சிக்கு, பரமேஸ்வரன் மண் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள் கொடுத்தார். ஆகவே நாமும் அங்கு சென்று வழிபட்டால் வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும்.

நீருக்குரிய ஸ்தலம் திருவானைக்காவலில் உள்ளது. இங்கு நீராக பரமேஸ்வரன் எழுந்தருளிக் காட்சி தந்ததாக ஐதீகம். இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் வழிபட்டு முக்தி பெற்றதாகச் சொல்வார்கள். அதுபோல வாழ்க்கையில் சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள் இந்தத் தலத்திற்கு வந்து, யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் அமைதியும், ஆனந்தமும் பெருகும்.

நெருப்பிற்கு முக்கியத்துவம் தரும் தலம் திருவண்ணாமலை. ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி லிங்கத்தின் அடிமுடி காண பிரம்மாவும், விஷ்ணுவும் விரைந்து சென்றனர். இருவரும் காண இயலாமல் போகவே பக்திச் சிரத்தையுடன் வழிபட்டனர். அப்போது பரமேஸ்வரன் ஜோதி லிங்கமாக வெளிப்பட்டதாக ஐதீகம். எடுத்த காரியத்தை முடிக்க இயலாமல் திண்டாடுபவர்கள் சென்று வழிபட வேண்டிய பஞ்சபூத ஸ்தலம் திருவண்ணாமலை ஆகும்.

அடுத்ததாக பஞ்சபூத ஸ்தலத்தில் காற்றுக்கு முக்கியத்துவம் தரும் தலம் திருக்காளஹஸ்தி. இங்குதான் கண்ணப்பர் அருள் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. கண்ணுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார், தின்னப்பர் என்ற பெயரோடு திகழ்ந்தவர். இறைவனுக்கு முகத்தில் கண்ணை அப்பியதால் கண்ணப்பரானார். சிலந்தியும், பாம்பும், யானையும் வழிபட்ட இந்த தலத்திற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டால் சர்ப்பக் கிரகங்களின் அருள் கிடைக்கும்.

பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்கு உரிய ஸ்தலம் சிதம்பரம். இங்கு கூத்தபிரான் அருள் கொடுக்கிறார். எனவே வானளாவிய புகழ் கிடைக்கவும், வரலாற்றில் இடம்பிடிக்கவும் இத்திருக்கோவிலுக்குச் சென்று நாம் வழிபட வேண்டியது அவசியமாகும்.

இயற்கை சக்தியால் நமக்கு நன்மை கிடைக்கவும், இவ்வுலகம் சீரோடும் சிறப்போடும் இயங்கவும், இயற்கை சீற்றங்களிலிருந்து விடுபடவும், பிறர் போற்றும் வாழ்க்கை அமையவும் மேற்கண்ட திருத்தலங்களுக்கு வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம்.

குறிப்பாக வருடம் ஒருமுறை, மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட விழாக் காலங்களில், அவரவர்கள் வசிக்கின்ற ஊர்களில் ஆலய மண்டபம் அல்லது ஒரு மண்டபம் ஏற்பாடு செய்து, அதில் பஞ்சபூத ஸ்தலங்களில் காட்சி தரும்தெய்வப் படங்களை வைத்து பூஜித்துக் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தலாம். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் விளைவாக நன்மைகள் பலவும் நமக்கு வந்து சேரும். பலர் ஒன்று கூடி ஒருமுகமாக நேர்மறைச் சிந்தனையோடு செயல்பட்டால், இயற்கை சக்திகள் நமக்கு இயல்பாக நன்மை தரும். இதுபோன்ற கூட்டுப்பிரார்த்தனைகள் பலன் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. நாமும் பிரார்த்தனையில் கலந்து கொண்டு நலமுடன் வாழ்வோம்.