சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி அரசியல் குறித்து பேசினார்.
அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் கூறப்பட்டன.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே விவசாயிகள் பிரச்சனையும் நாடு முழுவதும் பெரிதாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் விவசாயிகளைப் பற்றி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் நிலை மோசமாகி விட்டது. அவர்கள் இலவச அரிசிக்காக ரேசன் கடையில் காத்து நிற்கிறார்கள்.
நமக்கு 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய் விட்டது. நாம் நன்றாக இருக்கிறோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.
இப்போது ஆரோக்கியம் இல்லாத உணவுதான் கிடைக்கிறது. இன்று விவசாயிகளை கவனிக்காவிட்டால் அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும்.
நாம் வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும். விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல, அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு விஜய் பேசினார்.