சுருதிஹாசன் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். சமீபத்தில் இணைய தளத்தில் சுருதியை பற்றி விமர்சித்தவர்களுக்கு, “யார் கிண்டல் செய்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. சமூக வலைத்தளம் மக்கள் வாழ்க்கை, எண்ணத்தை பிரதிபலிக்கிறது.
அடுத்தவர்களை பற்றி ஏதாவது இதில் சொல்கிறார்கள். நேரில் செய்ய முடியாததை செய்ய சமூக வலைத்தளம் தைரியம் அளிக்கிறது. அடுத்தவர்களின் கருத்துக்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. மற்றவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்தால் யாரும் நம் வேலையை செய்ய முடியாது. வீட்டைவிட்டு வெளியே கூட வரமுடியாது” என்று பதில் அளித்து இருந்தார்.
இப்போது தனக்கு பிடிக்காத, பிடித்த விஷயங்கள் பற்றி சுருதிஹாசன் இப்படி கூறுகிறார்…
“எனக்கு ஸ்டார் என்ற வார்த்தை பிடிக்காது. ஏனென்றால் அந்த வார்த்தையுடன் நிறைய பிரஷரும் சேர்ந்து வந்துவிடுகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை. என் வாழ்வில் பல சங்கடங்களை கடவுள் அருளால் கடந்து வந்திருக்கிறேன்.
எனது அப்பா கமல் தான் என் சூப்பர்மேன். ‘சபாஷ்நாயுடு’ படத்தில் அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம். அதில் நான் செய்யும் வேலையில் திருப்தியாக இருப்பது எனக்கு பெருமை. மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது வந்த புதிதில் கடினமாக இருந்தது. இப்போது எனக்கு இதுபற்றி கவலை இல்லை. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது”.