“இந்திய மக்களிடையே வாயில் புற்றுநோய் ஏற்படுவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது” என்கிறார், பல்மருத்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி.
புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்க, வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோய்க்கு முழுமையான தீர்வுகிடைக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வாயில் புண் ஏற்படுவது, வாய்ப் புற்றுநோய்கான அறிகுறியாக கூறப்படுகிறது.
* வாயில் ஏற்படும் புண்கள் ஆறாமல் பத்து நாட்களுக்கு மேல் இருந்தால் கவனியுங்கள்.
* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலும் உஷாராகிவிடுங்கள்.
* வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படுவதும் ஒருவித அறிகுறிதான்.
* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமான கன்னங்களும், ஈறு வீக்கங்களும் உண்டாகலாம்.
* சாப்பிடும் உணவுப் பொருட்களும், வாயில் உண்டாகும் நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன. அதனால்தான் வாயை அடிக்கடி சுத்தம் செய்கிறோம். கூடவே வாயை சுத்தப்படுத்தும் சில வகை உணவுகளும் இருக்கின்றன.
அவைகள் என்னென்ன தெரியுமா?
* தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுங்கள். இதனால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும். கிரீன் டீ உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
* பாலாடைக்கட்டியை தினமும் சாப்பிட்டு வரலாம். அளவோடு இதை சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான சத்து கிடைத்துக்கொண்டிருக்கும். அதனால், பற்களின் உறுதி பாதுகாக்கப்படும்.
* பற்களை சுத்தம் செய்ய விரும்புகிறவர்கள், கேரட்டை கடித்து சாப்பிடவேண்டும். கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது. கேரட் பற்களில் உள்ள அழுக்கை நீக்கி, வாயை புத்துணர்ச்சியாக்குகிறது.
* புதினா இலைகளை வாயில் இட்டு மெல்லுங்கள். மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணமாக வீசும். வாயும் சுத்தமாகும்.
* பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்பு களுக்கு தேவையான கால்சியத்தை பால் அளிக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு பலம் கிடைக்கும்.
கண்ணாடி முன்பு நின்று அவ்வப்போது உங்கள் பற்களை பாருங்கள்.
உங்கள் ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானது என்று அர்த்தம்.
வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் இருந்தாலும் வாய் நாற்றம் வீசும்.
பற்களை தினமும் இரண்டுமுறை மென்மையாக துலக்குங்கள். இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில்தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களில் செயல்பட்டு அமிலத்தை உருவாக்கும். அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
தினமும் நாலைந்து முறை சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றிவிடும். பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். வருடத்தில் இரண்டு முறை பற்களை டாக்டர்கள் மூலம் பரிசோதிக்கும் பழக்கத்தையும் உருவாக்குங்கள்.