யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சமூகத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுச் சந்திப்பொன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கு நான் தயாராகவிருக்கின்றேன் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன்தெரிவித்தார்
கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கருவி மாற்றுத் திறனாளிகள் சமூக வள நிலையத்தின் தலைவர் க. தர்மசேகரம் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்தில் வலுவுள்ளோர்கள் தொகை அதிகரித்துச் செல்கிறது. போரினால் வலுவிழந்தவர்கள் இயற்கையால் வலுவிழந்தவர்கள் விபத்துக்கள் காரணமாக வலுவிழந்தவர்கள் போன்றோர் எம்மத்தியில் காணப்படுகின்றனர்.
இவ்வாறான வலுவிழந்தவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதற்காக அவர்களைப் பராமரிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது ஆற்றலை அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளையும் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையம் வழங்கி வருகின்றமை பாராட்டுதற்குரியது என்றார்.