இரணைதீவு மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவு மீள்குடியேற்ற விவகாரத்தை எழுப்பியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார்.
அப்போது, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இரணைதீவில் கடற்படையினரின் ராடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் கதிரியக்க பாதிப்பு ஏற்படும். எனவே அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவது குறித்து கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது என்று கூறினார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இரணைதீவில் அமைக்கப்பட்டுள்ள ராடர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து என்றால், கடற்படையினர் எப்படி தங்கியுள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், ராடர்களை சிறிய தீவுகளுக்கு மாற்றி விட்டு இரணைதீவில் மக்களை குடியமர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, நேற்றைய கூட்டத்தில் வலி.வடக்கு காணிகள் இராணுவத்தினர் வசமிருப்பதால், மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டினார். அத்துடன், மயிலிட்டி இறங்குதுறையை விடுவிப்பது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிறிலங்கா அதிபர், இன்று நடக்கும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு குறித்து பேசுவதாகவும், மயிலிட்டி துறைமுக விடுவிப்பு குறித்து யாழ்.மாவட்ட படைத் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.