உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை மட்டுமல்ல, மாகாண சபைத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தாதிருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதாக குறிப்பிட்டு, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறிக்கையொன்றினூடாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைய, குறித்த காலம் முடிவடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை பிற்போடவேண்டுமாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பொன்றினூடாக புதிய சட்டமொன்றையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், மாகாண சபைத் தேர்தல் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது எனக் குறிப்பிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்த அரசாங்கத்துக்கு தேவையிருக்குமாயின், வடக்கு, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்ததுடன், அனைத்து மாகாண சபைகளுக்கும் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கீர்த்தி தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.