ஜனாதிபதியுடன் யார் சந்திக்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியாது. நாங்களும் அவரைச் சந்திக்க வேண்டும். எமது பிள்ளைகள் எங்கே? ஜனாதிபதித் தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் எங்கே என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்
யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் மாகாண ஆளுநர் அலுவலகங்களுக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ளதாக அறிந்த நிலையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலக முன்றலில் கூடி தமது உறவுகளின் புகைப்படங்களை கையில் தாங்கியவாறு காத்திருந்தனர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அங்கு மேலும் கூறுகையில்,
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்திப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஜனாதிபதியுடன் யார் சந்திக்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியாது.
நாங்களும் அவரைச் சந்திக்க வேண்டும். எமது கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவேண்டும். வடக்குக் கிழக்கு மக்களாலேயே மைத்திரிபால ஜனாபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி எமது பகுதிக்கு வேட்பாளராக வருகை தந்தபோது காணாமலாக்கப்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் நீண்டகாலமாகியும் எமக்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தெற்கிற்கு மட்டும் ஜனாதிபதியல்ல. வடக்குக்கும் ஜனாதிபதி. எமக்காக அவர் தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் என்றனர்.