வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் உடன் இருந்த தூதரக உறவுகளை சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 7 நாடுகள் திடீரென முறித்தன. பயங்கரவாதத்திற்கு கத்தார் துணை போவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் கத்தாருக்கு துணையாக சமரச நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் நிலவும் சமீபத்திய குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் உச்ச தலைவர் அயடோலா அலி கமேனெய் தெரிவித்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா போரிடுவது பொய்யானது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்காதான் எனவும் கமேனெய் தெரிவித்துள்ளதாக இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே 1979 முதல் தூதரகம் உள்ளிட்ட எந்த விதமான உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.