ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் ஆவேச தாக்குதல் நடத்துவோம் – ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர். இதை எதிர்க்கும் நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ரமலான் நோன்பு காலத்தில் மேற்கத்திய நாடுகள், மத்தியகிழக்கு வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஆசியாவிலுள்ள
அனைத்து நாடுகளிலும் அதிரடி தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐ.எஸ்
தீவிரவாதிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆடியோ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ பதிவில் பேசியவர் கூறியுள்ளதாவது:-

ஈராக்கின் மொசூல், ரக்கா மற்றும் டெல் அபார் நகரங்களில் மிளிரும் முகங்களுடன் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட புனித ஆயுதங்களுடன் போராடி வரும் எமதருமை சிங்கங்களே… எதிர்ப்பாளர்களையும், நமக்கு எதிரான வீண் பரப்புரையாளர்களையும் எதிர்த்து நடக்கும் இந்த போராட்டத்தில் தனிமனிதராக நின்று நீங்கள் வெற்றி பெற வேண்டும்.

ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா மற்றும் இதர நாடுகளில் போராடிவரும் எமதருமை சகோதர்களே.. உங்களுக்கு முன்னர் இந்த புனிதப்போரில் ஈடுபட்ட மற்ற தியாகிகளை முன்னோடியாக கொண்டு உங்களது தாக்குதலை நீங்கள் தொடர வேண்டும்.

இதேபோல், மேற்கத்திய நாடுகள், மத்தியகிழக்கு வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் நாம் அதிரடியாக தாக்குதல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த ஆடியோ செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடியோ செய்தியின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பேசியுள்ளது, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் அபி அல்-ஹஸன் அல்-முஹாஜர் என கருத்தப்படுகிறது.