26-ந் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடக்கவுள்ள மோடி, டிரம்ப் பேச்சுவார்த்தையில் இடம்பெறுகிற அம்சங்கள் குறித்து அமெரிக்க உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் டிரம்ப் இனிமையாக பேசினார். அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, வரும் 25, 26-ந் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
சமீபத்தில் பாரீஸ் பருவ நிலைமாற்ற உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அறிவித்ததுடன், இந்தியா மீதும், சீனா மீதும் குற்றம்சாட்டினார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு மோடி செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
26-ந் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் மோடி இருதரப்பு அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய தகவல் தொழில்நுட்ப துறையினருக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த ‘எச்-1பி’ விசா நடைமுறைகளில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தனது கவலையை டிரம்பிடம் மோடி பகிர்ந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோடி, டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு, பேச்சுவார்த்தை தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சீன் ஸ்பைசர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்க, இந்திய கூட்டினை விரிவாக்குகிற விதத்தில், இரு தலைவர்களும் ஒரு கண்ணோட்டத்தை உருவாக்குவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.
160 கோடி மக்களுக்கு உகந்த விதத்தில் அமெரிக்க, இந்திய கூட்டணிக்கு ஒரு பொதுவான பார்வையை ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் மோடியும் கோடிட்டுக்காட்டுவார்கள்.
இரு தலைவர்களும் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாதகமான உரையாடல்களை நடத்தி உள்ளனர். அந்த வகையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போர், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், சீர்திருத்தங்கள் செய்தல், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் பேச்சுவார்த்தையில் முன்னுரிமையுடன் இடம்பெறும்.
புதிய இந்தியாவை காணவும், அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மோடி கொண்டுள்ள எண்ணத்தை கட்டமைக்கிற விதத்தில் அமெரிக்காவின் இயற்கை எரிவாயு, எரிசக்தி, தொழில்நுட்ப துறைகள் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.