இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த லீக் போட்டிகள் முடிவில் இங்கிலாந்து, இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடம் பிடித்த இங்கிலாந்தும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பிடித்த பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளைமறுநாள் (15-ந்தேதி) நடக்கும் போட்டியில் ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்த வங்காள தேசமும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.சி.சி. நடத்தும் முக்கியமான தொடரில் வங்காள தேசம் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடுவோம் என்று வங்காள தேச வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் முதல் போட்டியிலேயே தனது ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த போட்டியில் 5 விக்கெட்டும், அடுத்த போட்டியில் 5 விக்கெட்டும், 3-வது மற்றும் கடைசி போட்டியில் 3-வது விக்கெட்டும் வீழ்த்தினார். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவிற்கு எதிரான தொடரை வங்காள தேசம் 2-1 எனத் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
ஆசிய கண்டத்தில் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் அசத்திய முஸ்டாபிஜூர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திணறி வருகிறார். மூன்று போட்டிகளில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆனால், அரையிறுதி போட்டியில் ஆஃப்-கட்டர்ஸ் பந்து மூலம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் கூறுகையில் ‘‘என்னுடைய பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை என்றாலும், முன்னேற்றத்தில் எந்த இடையூறும் இல்லை. என்னுடைய ஆஃப்-கட்டர்ஸ் பந்து வீச்சு அதிக தாக்கத்துடன் திரும்ப வலிமை பெறும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் என்னுடைய பந்து சரியாக இல்லை. ஆனால், நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். இந்தியாவை எதிர்த்து விளையாட இருக்கிறோம். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். என்னால் எந்த அளவிற்கு சிறப்பான வகையில் பந்து வீச இயலுமோ, அந்த வகையில் பந்து வீசுவதற்கே எப்போதும் முயற்சி செய்வேன். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவரை நம்புகிறோம். ஒவ்வொருவருக்கும் அன்றைய நாள் சிறந்ததாக அமைந்தால், சிறந்தது நடக்கும்’’ என்றார்.