நியாயத்தை பெறுவதில் தமிழர்களுக்கு நெருக்கடி!

நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை ஆகியன இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.

நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் மோனிகா பின்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்த ஐ.நாவின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பான சிறப்பு நிபுணர் மோனிகா பின்டோ, இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் தொகுப்பை மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக முன்வைத்தார். அவர் சார்பில் தியாகோ காசியா சயான் பேரவையில் வாசித்தார்.

“இலங்கையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத் தன்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்காமை இலங்கையிலுள்ள மற்றுமொரு பிரச்சினையாகும்.

மொழி தொடர்பான பிரச்சினை பாரதூரமானது. நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ்ச் சமூகம் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அந்த மக்களின் நம்பிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம். நீதிமன்றக் கட்டமைப்பு விரிவாக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டபோதும், செயற்றிறன் கொண்ட நீதிமன்ற மறுசீரமைப்புக்காகத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.