கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘ரங்கூன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இன்று கவுதம் கார்த்திக் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நடிகர்கள் கேமராவின் முன் நடிப்பது மட்டும் நடிப்பல்ல, இன்னும் நிறைய உள்ளது. நான் சிப்பாய், இவன் தந்திரன், ஹரஹர மஹா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்.
இப்போது ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்‘ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் ‘கடல்’.
‘ரங்கூன்’ என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும். எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான். அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
கண்டிப்பாக எனக்கு காதல் திருமணம் தான். 35 முதல் 40 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். தற்போது அப்பா, மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறுத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட். அவர் நடித்ததில் எனக்கு ‘கோகுலத்தில் ஒரு சீதை’ திரைப்படத்தில் வரும் ‘கிரெடிட் கார்ட்‘ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்.
சினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன். சினிமாவில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்றால் அது ஆர்.ஜே. பாலாஜி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் படத்தில் நடித்த டேனியல் ஆகியோர்.
நான் ஸ்க்ரிப்டை பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் கலந்து பேசுவேன். அப்பா நான் நடித்த ‘கடல்’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை பார்த்துள்ளார். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் அப்பாவை பற்றி சொல்லும் போதுதான் அவரை பற்றி எனக்கு தெரியவருகிறது. அப்பா என்னை தம்பி என்று தான் கூப்பிடுவார். வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் இன்னும் நிறைய கவனம் செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.