மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஆர்.தியாகராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராயபுரம், சூரியநாராயணா செட்டித்தெருவில் ‘ஐ டிரீம்ஸ் சினிமாஸ்’ திரையரங்கு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.), பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவைகளிடம் இருந்து முறையான எந்த ஒரு அனுமதியையும் பெறாமல், இந்த திரையரங்கு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டேன். அதற்கு பதிலளித்த, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள், இந்த தியேட்டருக்கு உரிமம் கேட்டு கொடுக்கப்பட்டதாக தங்களிடம் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி பதிலளித்தனர்.
இந்த நிலையில், இந்த திரையரங்கு நிர்வாகத்திடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி, விண்ணப்பத்தை பெற்று, 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கு உரிமம் வழங்கி சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அதுவும் கடந்த காலத்துக்கு தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கு பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எனவே, முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் இந்த திரையரங்கை இழுத்து மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
விசாரணையை வருகிற ஆகஸ்டு 21-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.