நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.
படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட. அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது’ என்றார்.
முன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து கிடைத்த சிறிய ஓய்வில் சென்னைக்கு வந்து தன்னுடைய அப்பாவுடன் தங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து லண்டனுக்கு பறந்து சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் இறதிக்கட்ட பணிகளில் ஈடுபடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.
இந்த இசை ஆல்பம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.