இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி கொலை?: வீட்டில் பிணமாக கிடந்தார்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் கிரித்திகா சவுத்ரி. 23 வயதான இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. இதனால் மும்பைக்கு சென்று அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பட கம்பெனிகளுக்கு சென்று நடிக்க வாய்ப்பு தேடினார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. ‘ரஜ்ஜோ’ என்ற இந்தி படத்தில் கங்கனா ரணாவத்துடன் இணைந்து நடித்தார். இதில் அவர் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. மேலும் சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், கிரித்திகா தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் கிரித்திகா பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. வீட்டின் வெளியே பூட்டப்பட்டு இருந்ததால், கிரித்திகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கிரித்திகா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தவர் யார்? சினிமா வட்டாரத்தில் யாரையேனும் காதலித்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். கிரித்திகா சவுத்ரி மர்ம மரணம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.