அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ், சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் 100 பிரபலங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரையிலான காலத்தில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 நபர்களின் மொத்த வருவாய் 515 கோடி டாலர் என இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்க ராப் இசைக்கலைஞரான சீன் கோம்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 13 கோடி டாலர் ஆகும். அடுத்து அமெரிக்க பாடகர் பெயான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருடைய ஆண்டு வருவாய் 10.50 கோடி டாலராக உள்ளது.
நாவலாசிரியர் ஜே.கே. ரவுலிங் மூன்றாவது இடத்திலும், இசையமைப்பாளர் டிரேக் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். இவர்களுடைய வருவாய் முறையே 9.50 கோடி டாலர் மற்றும் 9.40 கோடி டாலராக இருக்கிறது. 9.30 கோடி டாலர் வருவாயுடன் கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் மூன்று பாலிவுட் நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர். ஷாருக்கான் 3.80 கோடி டாலர் வருவாயுடன் 65-வது இடத்தில் இருக்கிறார். சல்மான்கான் 71-வது இடத்திலும், அக்ஷய் குமார் 80-வது இடத்திலும் உள்ளனர்.