மூலிகை இலைகளில் மிகச்சிறந்த மூலிகையாக நொச்சி விளங்குகிறது. மலைப் பகுதிகளில் வளரும் இவை, அதிகமான உயரத்துடன் காணப்படும். நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.
நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை கால்நடைகள் உண்ணாது. கிராமப்புறங்களில் வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும் இந்த மூலிகை செடியை அதிகமாக காணலாம். இந்த செடி சமவெளி பகுதியில் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மலைப்பகுதிகளில் 6 மீட்டர் வரையிலும் வளரும். நொச்சி செடிகளை ஆரம்பத்தில் ஈரம் காயாமல் வளர்த்து வந்தால், எளிதில் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது.
நொச்சி இலையை காய்ச்சி, ஆவி பிடித்தால் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி தீரும், சைனஸ் கோளாறுகள் சரியாகும். மிளகு, பூண்டு உடன் சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைகளைத் தேய்த்து வந்தால், அவை மறையும்.
காய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையை தீமூட்டி, புகை மூட்டம் போட்டால், கொசுக்கள் அண்டுவதில்லை. புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல், நொச்சிக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளித்தால், பிரசவித்த தாய்மார்களுக்கு அசதி குறையும். நரம்புகளை வலுப்படுத்தவும் இந்த மூலிகை செடி உதவுகிறது. காய்ந்த நொச்சி, சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. உடம்பில் நீர்க்கோர்வைகளை போக்கவும், மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் இது உதவுகிறது.
மேலும் வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் ஒவ்வாமை, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றை போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. எனவே, நொச்சி இலை மனிதர்களின் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் எளிய மூலிகை. இந்த மூலிகைச் செடி வீட்டுத் தோட்டங்களிலும், மாடித் தோட்டங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.