வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவும் பதவி விலக முன்வர வேண்டும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன் பா.சத்தியலிங்கம் இருவரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இன்றைய நிலமைக்கு நான் காரணமல்ல. சில அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்கவில்லை. இந்த விடயத்தை சந்தி சிரிக்க மன்றில் எடுத்து பத்திரிகைகளில் விளாசிவிட்டார்கள்.
நடைமுறை மாற்றத்தை உறுப்பினர்களும் மக்களும்விரும்புகின்றார்கள் என்றும் வடக்கு முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை வடக்கு முதலமைச்சர் உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினர். அவர்களுடன் சேர்ந்து கல்வி அமைச்சர் குருகுலராசாவும் வெளியேறியிருந்தார்.
வடக்கு முதலமைச்சரின் உரையின் பின்னர் சபை 22 ஆம்திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே வேளை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவை பேசுவதற்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சபை உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரை பேசஅனுமதிக்க முடியாது அவ்வாறு பேச அனுமதித்தால் ஏனைய உறுப்பினர்களும் பேசுவார்கள் என சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் வழங்கினால் நான் பேசுவேன் எங்களுக்கு பேச வாய்ப்பளிக்காவிட்டால் எதிர்க்கட்சியாகிய நாங்கள் சபையை விட்டு வெளியேறுவோம் என எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் ‘எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்’ எனக் கூறியுள்ளார்.
இதன்போது இது ஜனநாயகத்துக்கு முரணான செயல் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஒருதலை பட்டசமாக செயற்படுகின்றீர்கள்’ என அவைத் தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.