சஹாரா பாலைவனத்தில் மரணத்தின் விளிம்பிலிருந்த சுமார் 100 குடியேறிகளை வட நைஜரில் உள்ள படையினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய அக்குழுவை கடத்தல்காரர்கள் தண்ணீர் மற்றும் உணவுகளின்றி கைவிட்டு சென்றதாக இராணுவம் கூறியுள்ளது..
ஐரோப்பாவை அடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலை தாண்டுவதற்குமுன் வட ஆஃப்ரிக்காவை அடைய நைஜரிலிருந்து லிபியாவுக்கு செல்லும் இந்த பாதை குடியேறிகளுக்கு மிகவும் முக்கிய பாதைகளில் ஒன்றாக உள்ளது.
எனினும் பாலைவனம் ஊடாக செல்லக்கூடிய இந்த பயணம் குடியேறிகளுக்கு ஆபத்தானது. காரணம் சரக்கு வாகனங்களில் சிறியளவிலான உணவு மற்றும் தண்ணீருடன் குடியேறிகள் திணிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சஹாரா பாலைவனத்தில் சரக்கு வாகனம் ஒன்று பழுதடைந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட குடியேறிகள் தண்ணீரின்றி பலியாகியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 20 குழந்தைகள் உள்பட 34 குடியேறிகளின் உடல்கள் சஹாரா பாலைவனத்திற்கு அருகே நைஜர் எல்லை அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.