ஞானசார தேரருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள மஹிந்தவின் சட்டத்தரணி!

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் ஞானசார தேரரை மறைத்து வைக்க வேண்டிய தேவை அமைச்சர்களுக்கு இல்லை. மஹிந்தவின் சட்டத்தரணியே அவரை மறைத்து வைத்துள்ளார் என, சுகாதார அமைச்சரும்அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.

கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதல்கள், ஞானசார தேரர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஊடகவியலாளர்கள், இதன்போது கேள்வியெழுப்பினர்.

அதற்கு, அமைச்சரவை இணைப்பேச்சாளர்களான, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோர் பதிலளித்தனர்.

ஊடகவியலாளர்கள் : ஞானசார தேரர், தற்போது ஒழிந்து தானே இருக்கிறார், அவரைக் கைது செய்ய மாட்டீர்களா, யுத்தத்தை நிறைவுசெய்த உங்களால் தேரரைக் கைது செய்ய முடியவில்லையா?”

அமைச்சர் ராஜித : ஆம். தேரரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர் : அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் தான் உள்ளார் என்று அசாத் சாலி, அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

அமைச்சர் ராஜித : அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஞானசார தேரருக்கு அடைக்கலம் அளித்து மறைத்து வைத்துள்ளதாகச் சொன்னார்கள். நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, எனக்கும் தேரருக்கும் எவ்வித தொடர்புமில்லை. தேரரின் சட்டத்தரணியான மனோஹர சில்வா, தேரரின் சட்ட ஆலோசகராக செயற்படுகின்றார். அவருக்குத்தான் தேரர் எங்குள்ளார் என்பது தொடர்பில் தெரியும் என சம்பிக்க கூறினார்.

இந்த வழக்கறிஞர் தான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழக்குகளுக்கு நீதிமன்றில் ஆஜராகின்றவர்.

ஊடகவியலாளர்கள் : ஆனால், அமைச்சருக்குத் தொடர்பு உள்ளதாக அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனரே?

அமைச்சர் தயாசிறி ஜயசேகர: வெறுமனே அமைச்சர் ஒருவர் தான் இத்தேரரை மறைத்து வைத்துள்ளார் என்று கூறக்கூடாது. அந்த அமைச்சர் யார் என்பதையும் வெளிக்காட்ட வேண்டும். யார் அந்த அமைச்சர்?

ஊடகவியலாளர்கள் : நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, என்றுதான் கூறுகின்றனர்.

தயாசிறி ஜயசேகர: அமைச்சர் எவருக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்ற தேவை கிடையாது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று விரைவில் தெரியவரும்.

அமைச்சர் ராஜித: அமைச்சர்கள் வார்த்தையில் இல்லாமல், செயற்பாட்டிலேயே இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும். கடைகளை எரித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதும், அவரது அலைபேசி அழைப்புகள் குறித்து ஆராய்ந்த போது, அவர் பொதுபல சேனாவின் உறுப்பினர் தெரியவந்துள்ளது. அதற்கிணங்க, இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர் : இந்தச் சம்பவங்களுக்கு பொதுபல சேனாவையும் ஞானசார தேரரையும் மட்டும் எவ்வாறு குற்றவாளியாக உங்களால் கூறமுடியும்? அவர்களை தவிர, நிறைய குழுக்கள் நாட்டில் உள்ளன. ஞானசார தேரரை மட்டும் குற்றவாளியாக கருதுகின்றமைக்கு காரணம் என்ன?

அமைச்சர் ராஜித: (கோபத்துடன்) ஊடகவியலாளர் ஒருவர், ஞானசார தேரரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்கிறார். மற்றுமொரு ஊடகவியலாளரான நீங்களோ இத்தேரரை ஏன் கைது செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள். ஞானசார தேரரே தான் ஓர் இனவாதி அல்ல என்று இதுவரையிலும் கூறவில்லை. ஆனால், நீங்கள் அவருக்கு சார்பாக கதைக்கின்றீர்கள். தேரர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பௌத்த தர்மத்தில் கூறியுள்ளது. ஆனால், ஞானசார தேரர் அவ்வாறா நடந்துகொள்கிறார்?

அமைச்சர் தயாசிறி ஜயசேகர: தொல்பொருள் திணைக்களத்தின் காணிகளை எடுக்கிறார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தரப்பினரும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று பொதுபல சேனாவுக்கு எதிராக ஒரு தரப்பினரும் தற்போது பரஸ்பரக் குற்றங்களை முன்வைத்து வருகின்றனர். இவ்விரு தரப்பினராலும் நாட்டின் நல்லிணக்கமே பாதிக்கப்படுகின்றது. இதுவிடயத்தில் அரசாங்கம் பக்கச்சார்பின்றியே செயற்படும். நாம் நடுநிலையாகவே செயற்படுவோம்.

ஊடகவியலாளர்: நல்லாட்சி அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் இனவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதைவிட இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சியில் அதிகரித்துள்ளனவே?

அமைச்சர் ராஜித: எங்கே அதிகரித்துள்ளது? நீங்கள் என்ன 2015ம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டிலா இருந்தீர்கள்? எனது தொகுதியில் மட்டும் 250 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்குக்குச் சென்று பாருங்கள், அங்குள்ள பிள்ளைகளை கடந்த அரசாங்கம் கடத்தியதை தாய்மார்கள் கண்ணீருடன் கூறுவார்கள். இப்போது அப்படி நடக்கின்றதா? இல்லையே. நீங்கள் நினைப்பதைப்போல உடனடியாக இவற்றை நிறுத்தி விடுவது இயலாது. 5 வருடங்கள் எங்களுக்கு உள்ளது. அதற்குள் செய்வோம்.

ஊடகவியலாளர் : மஹிந்த அரசாங்கத்தை குறை கூறும் நீங்களும் அப்போது அமைச்சராகத் தானே இருந்தீர்கள்? ஏன் இவற்றுக்கு எதிர்ப்பு வெளியிடவில்லை?

அமைச்சர் ராஜித: நான் தான் முதலில் எதிர்த்தேன். உங்களைப் போன்று பயப்படவில்லை. சில ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் கடந்த அரசாங்கத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது தொடர்பில் நாம் மறக்கவில்லை. மஹிந்தவை எதிர்த்துதான் நாம் வெளியேறினோம் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம் என்றார்.