தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது.
14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் சார்பாக பாராளுமன்ற தலைமைச் செயலாளர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கின.
அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில், தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனு தாக்கலுக்கு கடைசி நாள் 28-ந்தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 29-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 1-ந்தேதி ஆகும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 17-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஜூலை 20-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளும் ஏற்ககூடிய பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதில் ஒருமனதாக முடிவு ஏற்படவில்லை என்றால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்.
பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை கடந்த 12-ந்தேதி அமைத்தார். இந்த குழு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தும்.
அதன்படி இந்த குழுவில் உள்ள மத்திய மந்திரிகள் மூவரும் நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் அவர்கள் சந்தித்து பேசுகின்றனர்.
பா.ஜனதாவை போலவே, எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து 10 பேர் கொண்ட துணை குழுவை அண்மையில் அமைத்தன. இந்த குழு நேற்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறையில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும், தேர்தல் உத்திகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியது. மிக முக்கியமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் மூவர் குழுவின் அணுகுமுறை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே(காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன்(திரிணாமுல் காங்கிரஸ்), சரத்யாதவ்(ஐக்கிய ஜனதாதளம்), லாலுபிரசாத் (ராஷ்டிரிய ஜனதாதளம்), சீதாராம் யெச்சூரி(மார்க்சிஸ்டு), ஆர்.எஸ்.பாரதி(தி.மு.க.), ராம்கோபால் யாதவ்(சமாஜ்வாடி), பிரபுல் பட்டேல்(தேசியவாத காங்கிரஸ்), சதீஷ் மிஸ்ரா(பகுஜன் சமாஜ்) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் யாருடைய பெயரையும் நாங்கள் பரிசீலிக்கவில்லை” என்றார்.
எதிர்க்கட்சிகளின் 10 பேர் குழு அமைக்கப்பட்ட பிறகு அந்த குழு கூடி ஜனாதிபதி தேர்தல் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
எதிர்க்கட்சிகளுடன் மூவர் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அவர் வருகிற 23-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் எனவும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று நேற்று மாலை அறிவித்தது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போதுவது யார் என்பது பற்றி தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ரகசியம் காத்து வருகின்றன. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுபற்றிய தெளிவான நிலை தோன்றி விடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.