சட்டசபையில் இன்று மீண்டும் குரல் கொடுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு மதியம் 3.15 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அ.தி.மு.க. அரசு இப்படி நடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் அவை எப்படி நடக்கும்?

பதில்:- எங்களை எல்லாம் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியதால், அதனை கண்டிக்கும் வகையில் சாலை மறியலில் நாங்கள் ஈடுபட்ட காரணத்தினால், கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். சட்டமன்றம் நடந்து முடிந்த பிறகு இப்போது எங்களை விடுதலை செய்திருக்கிறார்கள்.

இன்று காலையில் நாங்கள் சட்டமன்றத்துக்குச் சென்று, இந்தப் பிரச்சினையை மீண்டும் சட்டப்பேரவையில் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிச்சயம் குரல் கொடுப்போம்.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த ஆட்சியாளர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களே, இனி எப்படி அவை நடக்குமோ என்று அனைவரும் கேட்கக்கூடிய வெட்கக்கேடான நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

கேள்வி:- தி.மு.க. ஆட்சியில் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நாங்களும் செய்கிறோம் என்று அ.தி.மு.க.வினர் தெரிவிக்கிறார்களே?

பதில்:- தி.மு.க.வினர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றனவே தவிர, ஜெயலலிதா போன்று, அதேபோல இன்றைக்கு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்று 4 வருட சிறைத்தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட வரலாறு, அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடந்துள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.