இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் வங்கதேசம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்து எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா வங்கதேசம் போட்டிக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், தங்களை விட இந்திய அணிக்கே கூடுதல் நெருக்கடி என்று வங்கதேசம் கேப்டன் மஷ்ரப் மோர்டஸா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாங்கள் அரையிறுதியில் விளையாடுகிறோம். இது நெருக்கடியான போட்டி தான். ஆனால் எங்களுக்கு உள்ள நெருக்கடியை விட இந்திய அணிக்கு தான் கூடுதல் நெருக்கடி. ஏனெனில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் கிரிக்கெட்டை அதிக அளவில் நேசிக்கின்றனர்” என்றார்.
சாம்பியன்ஸ் தொடரில் இதுவரை தரவரிசையில் டாப்பில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு தரவரிசையில் பின் வரிசையில் உள்ள அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் வங்கதேசமும் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா என்று அச்சமும் இந்திய ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.