சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்திய இங்கிலாந்தும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 211 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், ஜுனைத் கான், ரயீஸ் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அசார் அலி, பகர் ஜமான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ஒவருக்கு தலா 6 ரன்கள் வந்து கொண்டே இருந்தது.
இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21.1 ஓவரில் 118 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டாக 58 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் பகர் ஜமான் ஆட்டம் இழந்தார். அணியின் ஸ்கோர் 173 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் ஜோடி சேர்ந்து ஹபீஸ் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் சரியாக 37.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாளை நடைபெறும் இந்தியா – வங்காள தேசம் போட்டியில் வெற்றி பெறும் அணியோடு வருகிற 18-ந்தேதி பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகிறது.