கவுதம் கார்த்திக்-ஸ்ரதா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்.’ இந்த படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்துள்ளார். இவன் தந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் டி.சிவா கலந்துகொண்டு பேசியதாவது:-
“சிறிய, நடுத்தர தயாரிப்பாளர்கள் படங்களை திரைக்கு கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். செலவுகள் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. படங்களை வியாபாரம் செய்ய முடியவில்லை. சரக்கு சேவை வரியான ஜி.எஸ்.டியும் தயாரிப்பாளர்களை நசுக்குகிறது. ஓரளவு இந்த வரி குறைக்கப்பட்டாலும் பயன் இல்லை. கிராம பகுதியில் டிக்கெட் கட்டண உயர்வால் பாதிப்பே ஏற்படும்.
சினிமா பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. 10 நாட்கள் திரையங்குகளை மூடினால் வன்முறைகள்தான் நடக்கும். சினிமா, மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது. காதல், நட்பு உள்ளிட்ட அனைத்தையும் சினிமா தருகிறது.
அந்த சினிமா இப்போது நன்றாக இல்லை. வரி சுமைகளால் தவிக்கிறது. தணிக்கை குழு விதிமுறைகளும் கடுமையாகி விட்டன. தணிக்கைக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. தணிக்கை குழுவின் அதிகாரம் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று விட்டது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி வற்புறுத்தியும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளை ரஜினிகாந்த் நினைத்தால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று மக்களிடம் சொல்லி அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியவர் அவர்.
எனவே ஜி.எஸ்.டி. வரி உள்பட சினிமா பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும். அவர் சொன்னால்தான் மத்தியில் இருப்பவர்கள் கேட்பார்கள்”.
இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.
விழாவில் டைரக்டர்கள் பாக்யராஜ், பாண்டிராஜ், நடிகர் கவுதம் கார்த்திக், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், எம்.கே.ராம்பிரசாத் உள்பட பலர் பேசினார்கள்.