பொலிசாரைத் திருப்பித் தாக்குவோம்! மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கம் எச்சரிக்கை

பொலிசாரின் வன்முறைத்தாக்குதலுக்கு இலக்காகும் நேரத்தில் தற்பாதுகாப்புக்காக பொலிசாரைத் திருப்பித் தாக்க வேண்டிவரும் என்று மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வத்தளையில் வைத்து போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளோட்டியொருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதலும் மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பில் அகில இலங்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளோட்டிகளை தாக்கும் பொலிசாருக்கு மனநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பொலிஸ் சேவையில் இருந்தும் விரட்டியடிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் பொலிசார் தொடர்ந்தும் இவ்வாறு மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் பட்சத்தில் தற்பாதுகாப்புக்காக அவர்களைத் திருப்பித் தாக்கும் நிலை ஏற்படலாம் என மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க எச்சரித்துள்ளார்.

அத்துடன் வத்தளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் அவர் முறைப்பாடு செய்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.