அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த ராபர்ட் முல்லரின் நியமனத்தை ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.
இந்த நிலையில், டிரம்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமியுடன், ராபர்ட் முல்லர் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக அறிந்து டிரம்ப் கடும் கோபம் கொண்டுள்ளதாகவும், இதனால் அவரை பதவி நீக்கம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாகவும் ‘தி நியுயார்க் டைம்ஸ்’ ஏடு எழுதியது. டிரம்பின் நண்பரான கிறிஸ்டோபர் ரூடி டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “முல்லரை பதவி நீக்கம் செய்வது பற்றி டிரம்ப் பரிசீலித்து வருகிறார்” என குறிப்பிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக துணை செயலாளர் சாரா ஹக்காபீ சாண்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ஜனாதிபதிக்கு அதற்கான (ராபர்ட் முல்லரை நீக்குவதற்கான) அதிகாரம் உள்ளது. ஆனால் அப்படி செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை” என கூறினார். ராபர்ட் முல்லருக்கு இந்த விவகாரத்தில் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற சபாநாயகர் பால் ரேயான், “ராபர்ட் முல்லர் தனது வேலையை செய்வதற்கு விடுவதுதான் சிறந்த ஆலோசனை” என குறிப்பிட்டார். இதேபோன்று ஜனநாயக கட்சி செனட் சபை எம்.பி., டயானே பெயின்ஸ்டீனும் கருத்து தெரிவித்துள்ளார்.