ஆட்டத்தின் 40-வது ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் வங்காளதேச வீரர் மக்முதுல்லா அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது பந்தை பீல்டிங் செய்த யுவராஜ்சிங் விக்கெட் கீப்பர் டோனி வசம் எறிந்தார். பொதுவாக இது போன்ற சமயத்தில் டோனி ஒரு கையுறையை (குளோவ்ஸ்) கீழே கழற்றி போட்டு விட்டு பந்தை பிடித்து ரன்-அவுட் செய்ய முயற்சிப்பது வழக்கம்.
அதே போலவே இந்த ஆட்டத்திலும் ஒரு கையுறையை கழற்றி போட்டார். துரதிர்ஷ்டவசமாக, ஸ்டம்பை நோக்கி அவர் வீசிய பந்து அருகில் கிடந்த கையுறையில் பட்டு விட்டது. ஹெல்மெட், கையுறை உள்ளிட்ட உபகரணங்களை பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒரு அணி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி இந்தியாவை தண்டிக்கும் (பெனால்டி) வகையில் எதிரணிக்கு 5 ரன் இலவசமாக வழங்கப்பட்டது.