அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.
இதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ? என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.