ரஜினிகாந்த், ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்திலும், கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம்-2’ படத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே பல வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் உள்ளன. இவை எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.
‘2.0’ எந்திர மனிதன் சம்பந்தமான கதை என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறுகிறது. சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல் ‘2.0’ படத்திலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கிராபிக்சை புகுத்துவதில் இயக்குனர் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார்.
இதற்கான பணிகள் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கான ‘டப்பிங்’ பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. ரஜினிகாந்த் 3 நாட்களில் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார்.
அடுத்த கட்டமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசைகோர்ப்பு பணிகளை தொடங்கி உள்ளார். ‘2.0’ அறிவியல் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் இசையால் மிரட்சியாக்கும் வேலைகள் நடக்கின்றன. விரைவில் இந்த படத்தின் பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். இந்தி நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வரூபம்-2 படத்தில் கமல்ஹாசன் உளவு துறை அதிகாரியாக வருகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான டப்பிங், இசைகோர்ப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பாடல்களையும் விரைவில் சென்னையில் விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் வருகிற 23-ந் தேதி வெளியாகிறது என்றும், படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம்-2 டிரெய்லர் குறித்த செய்தி தவறானது. ரசிகர்களின் ஆர்வத்துக்கு இணங்க படத்தின் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது உரிய தகவல்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.