வாக்கிங், மிக எளிய உடற்பயிற்சி; அதே சமயத்தில், மிக அதிகப் பலன் அளிக்கக் கூடியது. இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை; எந்த உபகரணங்களும் தேவை இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தால் போதும், பயிற்சி தொடங்கிவிடும். இதனால் இதயம், எலும்புகள் பலப்படுகின்றன, மன அழுத்தம் குறைகிறது. கொழுப்பைக் கரைத்து, உடலை ஃபிட்டாக்குகிறது, நம்பிக்கை பிறக்கிறது.
ஆனால், `நேரம் இல்லை’ என்ற காரணத்தைச் சொல்லி, வழக்கம்போல நம்மை நாமே போலியாக சமரசம் செய்துகொள்கிறோம். இதுபோன்ற நம் முயற்சியை முடக்கும் எண்ணங்களில் இருந்து எப்படி மீள்வது… மனதளவில் தோன்றும் சிக்கல்களை நீக்கி, எப்படி வாக்கிங் பயிற்சிக்குத் திட்டமிடலாம்?
காலையில், 5-6 மணிக்கு நடப்பதால் அதிகாலைக் காற்று நடப்பதற்கான ஆர்வத்தையும் எனர்ஜியையும் தரும்.
கோடை காலத்தில் எட்டு மணிக்கு மேல் சுளீர் என்று வெயில் அடிப்பதால், சாலைகளில் நடக்க வேண்டாம். பூங்கா பக்கம் சென்றுவிடுங்கள்.
தனியாக நடக்காமல், நண்பர் அல்லது உறவினரோடு நடக்கலாம்.
சாலையில், பாடல் கேட்டபடி நடப்பதைத் தவிர்க்கலாம். வாகனம் வருவதற்கு எதிர்ப்புறத்தில் நடக்க வேண்டும். இதனால், விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தொடர்ந்து ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம். வாரத்தில், இரண்டு நாட்களுக்கு புதிய இடங்களில் வாக்கிங் செல்லலாம். இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்போதுதான் சுவாரஸ்யம் அதிகரிக்கும்.
நடக்கும் அளவைத் தெரிந்துகொள்ள, வாக்கிங் ஆப்ஸ் அல்லது வாக்கிங் ஸ்டெப்களைக் கணக்கிடும் வாட்ச்களையும் பயன்படுத்தலாம்.
வாரத்தில் ஒருநாள் மட்டும், வாக்கிங் முடித்துவிட்டு வீடு திரும்பும் முன் பழச்சாறுகளை வாங்கிக் குடியுங்கள். உடலுக்கு உற்சாகமூட்டும் பழச்சாறைக் கொடுத்து உடலை ரோக்கியப்படுத்திக்கொள்ளலாம்.