எதிரிகளுடனும் துரோகிகளுடனும் இணைந்து முதலமைச்சரைக் கவிழ்ப்பதற்கு நான் என்றுமே துணைபோகமாட்டேன். என மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும் என் மீதும் என் சார்ந்தவர்கள் மீதும் கல்லெறிந்து கொண்டிருப்பவர்கள் ஒரு விடயத்தை மீட்டிப்பார்க்க வேண்டும். முதலமைச்சரை சிலர் எதிர்க்கத் தொடங்கியது இன்று நேற்றல்ல மாகாண சபை தொடங்கிய காலப்பகுதியிலிருந்தே கிட்டத்தட்ட ஒவ்வொரு அமர்விலும் சபையைக் குழப்பும் நடவடிக்கையை செய்துகொண்டிருந்தார்கள்.
அந்த நாட்களில் இப்பொழுது பொங்கியெழும் பலர் தம் சார்ந்தவர்களுக்கு பதவிகள் கொடுக்கவில்லையென்பதற்காக அமைதியாக இருந்தபோதும்இ முதலமைச்சரின் காப்பரணாக நானும் இருந்தேன் என்பது மாகாண சபை அமர்வுகளைத் தொடர்ந்து அவதானித்து வந்தவர்களுக்குப் புரியும்.
பணமும் பதவியும்தான் எனக்கு முக்கியமென்று வாய்கூசாமல் எழுதுபவர்களுக்கு என்னைப்பற்றித் தெரிய வாய்ப்பில்லை. யாரும் எனக்குத் தமிழ்ப்பற்றைக் கற்றுத்தர வேண்டிய தேவையுமில்லை. கடைசி நாள் சபையில் ஓர் ஆதாரமற்ற அறிக்கையை வைத்து கௌரவ அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோர்மீது நடவடிக்கை எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை.
எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த சபையில் சந்தர்ப்பம் இல்லாததால் முதலமைச்சரின் உரையைக் குறுக்கிட்டுச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு சபையைவிட்டு வெளிநடப்புச் செய்தேன்.
அதன் பிறகு நடந்த சம்பவங்களில் நானும் கலந்துகொண்டது துரதிஸ்ட வசமானது. ஆளுனரைச் சந்தித்த படங்களில் பசுபதிப்பிள்ளையும் இருந்தார் என்பதுதான் தங்களுக்குத் தெரிந்த செய்தி அதற்குள் தெரியாத செய்திகள் பல உள்ளன நேரம் வரும்போது மனம் திறப்பேன் என்றார்.