இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ”ஊழல் பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும்” என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் நிலவும் நெருக்கடி தொடர்பாக சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை தாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தபோது முதல்வர் விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டார் என்று சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
”அறிக்கை மறைப்பு”
அதன் பிறகு அவையில் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி ஏகமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள் என்று கூறும் சுமந்திரன் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார் என்றும் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டுகள் ஐங்கரநேசனுக்கு எதிராகவே இருந்த அந்த நிலையில் எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது என்று கூறிய சுமந்திரன் இது ஐங்கரநேசனை பாதுகாக்கு நடவடிக்கை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.