சந்தையில் எப்போதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலை இல்லை: ஜனாதிபதி

சந்தையில் எப்போதும் அரிசி தட்டுபாடு ஏற்படுவதற்கான நிலை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரிசியை கையிருப்பில் வைத்திருத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் அவரது செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த இந்த கலந்துரையாடல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சந்தையில் அரிசிக்கான தட்டுபாடு ஏற்பட்டுள்ள தகவலுக்கு அமைய ஜனாதிபதி இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதுடன், களஞ்சியத்தில் வைத்திருக்கும் அரிசி கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரிசி கையிருப்பை பேண வேண்டியதன் அவசியம் தொடர்பாக வலியுறுத்திய ஜனாதிபதி, வர்த்தக அமைச்சு தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதிக விலைக்கு சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவதனால் நுகர்வோர் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுபாட்டை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்குஎதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்கால தேவைக்கருதி அரிசியை இறக்குமதி செய்தல், தனியார் துறையினரை தயார் செய்தல் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.