வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் .
அங்கஜன் இராமனாதனினால் இன்று வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிரான கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகும் .இதன் தலைவரே இந்நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கின்றார்.
எமது ஜனாதிபதியின் கொள்கையே இன்று இலஞச ஊழல் அற்ற நாட்டினை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது மட்டுமன்றி இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுத்து வருகின்றார் .
இப்படியிருக்க வடக்கு மாகாண சபையின் முதல்வர் இலஞ்ச ஊழல் தொடர்பாக எடுத்த எந்த ஒரு முடிவுக்கும் நாம் எதிர் செல்லவில்லை .எமக்கு அவ்வாறான பணிப்புரைகள் எதையும்ஜனாதிபதி எமக்கு தெரிவிக்கவும் இல்லை .
இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வடக்கு முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவதென்பது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவே ஆகும் .
இவர்களால் வெளியிடப்பட்ட முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்போ பொறுப்போ கிடையாது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து வடக்கு வாழ் தமிழ் உறவுகளுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் .
வடக்கு முதலமைச்சர் இலஞ்ச ஊழலுக்கு எதிராக முடிவெடுக்கும் போது அதை தவறு என இன்னொரு கட் சியினரே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவிநீக்க செயல்படுகின்றனர் என செய்திகள் குறிப்பிடும் இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் சியின் பெயரை இதில் பயன் படுத்தி கொள்வது ஆரோக்கியமானதல்ல .
வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த நல்ல விடயங்களையும் செயல்பாடுகளையும் முதன் முதலில் வரவேற்றவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்வடைகின்றேன் .
எல்லா விதத்திலும் துன்ப துயரங்களை அனுபவித்த எம்மக்களின் வலிகளை நாம் உணரவேண்டும் .இதை உணராத சில அரசியல்வாதிகள் எதற்கும் கட்டுப்படாமல் மற்றவர்களின் அறிவுரைகளை பெறாமலும் எடுக்கும் முடிவுகள் வடக்கு மக்களுக்கு எதிராக எடுக்கும் முடிவுகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை .
நாட்டின் அனைத்து மக்களினாலும் இலஞ்ச ஊழலற்ற நல்லாட்சி அரசு என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனாதிபதியை தலைவராக பிரதிபலிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்குமாறான இவ்வாறான செயல்ப்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .
என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .