வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வனுக்கு எதிராக காய்களை நகர்த்தி வரும் தமிழரசுகட்சி பலவிதமான நகர்வுகளை செய்துவரும் வேளையில் நேற்றைய சம்பந்தனின் தொலைபேசி உரையாடலில் எந்த தீர்வும் கிட்டாத நிலையில் தமிழரசுகட்சி எல்லா மாவட்ட கிளைகளிலும் அவசர மந்திராலோசனைகளை நடாத்தி வருகின்றனர்.
வடமாகாண முதலமைச்சருக்கு தமிழரசுக்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழரசு கட்சி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாகவும் அவர்களின் கருத்துக்களை அறியும் முகமாகவும் கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது.
நேற்றையதினம் முதலமைச்சருக்கு ஆதரவாக கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது அது கிளிநொச்சியிலும் நடைபெறுவதாக இருந்தவேளை சிறிதரன் தங்கள் ஆதரவாளர்கள் அங்கு சென்றால் கட்சிக்கு மேலும் சரிவு ஏற்படுமென கருதி காலை 10மணிக்கு ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடாத்தியுள்ளார்.
அந்த கூட்டத்திற்கு வந்த ஆதரவாளர்களிடையே பேசிய சிறிதரன் முதலமைச்சர்மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பின்னர் தொடர்ந்து பேசும்போது மாவை அண்ண என்ன செய்கிறார்?
தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தமை அவருக்கு தெரியாதா? அல்லது அவரும் தெரிந்துகொண்டு இவ்வாறு நடந்துகொண்டாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு சிலவேளை சுமந்திரனால் தொலைபேசிமூலமாக கட்டளைகள் போயிருக்க வாய்ப்பிருப்பதாகவும் இவர்கள் இவ்வாறு செய்வதால் தமிழரசு கட்சிக்குதான் அவப்பெயர் ஏற்படுவதாகவும் கவலைப்பட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய சிறிதரன் விடுதலைப்புலிகள் மாத்தையா பிரிவின் போது எவ்வாறு நடந்து கொண்டார்களோ அல்லது கருணா விடுதலைப்புலிகளைவிட்டு பிரிந்தபோது என்ன செய்தார்களோ அதே போன்றதொரு நிலமையே தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே யாராவது விலகிச்செல்லவோ அல்லது முதலமைச்சருக்கு ஆதரவாக முடிவெடுப்பதென்றால் எடுக்கலாம் அப்படியானவர்கள் கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக உத்தரவிட்டிருந்தார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட ஒருவர் முதல்வரைப்பற்றி பேசுகின்றீர்களே ஏன் உங்களால் சுமந்திரன் செய்யும் திருகுதாளங்களை ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை எனக் குறுக்கிட்டு கேட்டதும் கொஞ்சம் அமைதியானாராம் சிறிதரன்.
நிலமை இவ்வாறே சென்றால் கட்சியை எப்படி கொண்டுசெல்லமுடியும் என ஆதங்கப்பட்ட சிறிதரன் முதலமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்களை முகநூலில் பதிவுசெய்த ஆதரவாளர்களை கடுமையாக கடிந்து கொண்டார்.
குறிப்பாக இளைஞர் அணியை சேர்ந்த நகுலனை இவ்வாறு முகநூலில் பதிவு போடுவதானால் நீ கட்சியிலிருக்க முடியாது எனப்பேசியதாகவும் தெரியவருகின்றது.
ஆனால் சிறிதரனின் மகனே முதலமைச்சரின் புகைப்படத்தைதான் தனது முகநூல் அட்டைப்படமாக வைத்திருக்கிறார் என அங்கிருந்தவர்கள் பேகசிக்கொண்டதாகவும் தகவல்.