முப்படையினரைப் பயன்படுத்தி குப்பை அகற்ற அரசாங்கம் தீர்மானம்! அமைச்சர் ராஜித

முப்படையினரைப் பயன்படுத்தி குப்பை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தொற்று நோய்கள் மற்றும் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

தெருக்களில் குப்பைகள் நிறைந்திருப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

எனவே முப்படையினரைப் பயன்படுத்தியேனும் குப்பைகளை ஒழுங்கான முறையில் அகற்ற வேண்டும்.

இது தொடர்பான முன்மொழிவு ஒன்றை நான் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன்.

மேலும், குப்பைகளை அகற்றும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.