எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஆளும் தகுதியை இழந்து விட்டதாகவும், மீண்டும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார்.
பிப்ரவரி 18 ஆம் தேதியன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க எம்எல்ஏக்கள் கோடி கோடியாக பணம் பெற்றதாக எம்எல்ஏ சரவணன் பேசியதாக ஒரு வீடியோ ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சட்டசபையில் இந்த பிரச்சினை 3 நாட்களாக புயலை கிளப்பி வருகிறது.
எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரியும் ஆளுநரை சந்தித்து புகார் கொடுக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை 4 சென்னை வந்தார்.
இதையடுத்து ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பண பேரம் குறித்து முறையிட்டார்.
அப்போது பணம் பேரம் குறித்து அதிமுக ஏம்.எல்.ஏ. சரவணன் பேசிய சிடி ஆதாரத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஸ்டாலினுடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் உடன் இருந்தார்.
சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளும் தகுதியை எடப்பாடி அரசு இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.