ஈராக்: ஒரு லட்சம் அப்பாவி மனித உயிர்களை கேடயமாக பிடித்து வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் நாட்டின் மிக பழமையான மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு தங்கள் வசமாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவாறு அண்டைநாடான சிரியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்தவாறு, மேற்கண்ட நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

மோசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையின் துணையுடன் ஈராக் அரசுப்படைகள் சுமார் மூன்று மாத காலமாக தீவிரமாக உச்சகட்டபோரில் ஈடுபட்டுவருகின்றனர். மோசூலின் கிழக்குப்பகுதியை கைப்பற்றி உள்ள அரசுப் படைகள் எஞ்சியுள்ள பகுதியையும் மீட்கும் முயற்சியில் மேற்குநோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், அரசுப்படையினரின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள், சுமார் ஒரு லட்சம் அப்பாவி பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களை கடத்திவந்து அவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசூல் நகரில் அடைத்து வைத்துள்ளனர். அந்நகரத்தில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காத நிலையில் அவர்கள் அவதிப்படுவதாகவும், மொசூலை விட்டு யாரும் வெளியேற முயற்சித்தால் தீவிரவாதிகள் அவர்களை கொன்று விடுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.