சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் டெயிர் எஸ்ஸார் மாகாணத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் பகுதியை குறிவைத்து கடந்த ஜுன் 6 மற்றும் 8-ஆம் தேதி வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தளபதிகளான அபு ஒமர் அல்-பெகிகி மற்றும் அபு யாசின் அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அறிக்கையில், 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் நிரம்பிய 16 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவின் பாதுகாப்புக்கு அரணான காவற்படை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த எத்தனித்ததை, டிரான் மூலமாக வேவு பார்த்த ரஷ்யாவின் தகவலை அடுத்து, சிரிய ராணுவம் டெயிர் எஸ்ஸார் பகுதியில் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.
எனினும் இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.