ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் உச்சக்கட்ட பரபரப்பு நெருங்கிவிட்டது. கடந்த 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கிய இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா – சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பரம்பரை எதிரிகளான இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதால் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி ஏற்கனவே 2 முறை சாம்பியன்ஸ் டிராபியை (2002, 2013) கைப்பற்றி இருந்தது. தற்போது பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. ஏற்கனவே ‘லீக்‘ ஆட்டத்தில் 124 ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
பயிற்சியின் போது இந்திய வீரர் அஸ்வின் காயம் அடைந்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு மிகப் பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடைபெறலாம் என்று அகில இந்திய கேமிங் பெடரேசன் அமைப்பு கணக்கிட்டுள்ளது.
இங்கிலாந்தில் தொழில்நுட்ப ரீதியாக சூதாட்டம் சட்ட பூர்வமாக உள்ளது. சூதாட்ட தரகர்கள் இந்தியாதான் வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறும் என்று 100 ரூபாய் கட்டுபவர்களுக்கு ரூ.147 கிடைக்கும்.
அதே வேளையில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று ரூ.100 கட்டுபவர்களுக்கு ரூ.300 கிடைக்கும்.
ஆல் இந்தியா கேமிங் பெடரேசன் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ரோலண்ட் லெண்டாஸ் கூறும்போது, “இந்திய அணி ஆண்டு முழுவதும் விளையாடும் போட்டிகளின் மூலம் தோராயமாக ரூ.2 லட்சம் கோடி சூதாட்டத்தில் வசூல் செய்யப்படுகிறது. பல்வேறு ஆய்வு மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக இறுதிப்போட்டியில் மோதுவதால் சூதாட்டம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது என்றார்.
இந்தியாவில் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால் இங்கிலாந்துடன் இணையதளங்கள் வாயிலாக வைத்து கிரெடிட் கார்டு, இ-வாலட்ஸ் ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதும் இறுதி ஆட்டத்தை உலக முழுவதிலும் இருந்து 100 கோடி பேர் (நேரிலும், தொலைக்காட்சியிலும்) பார்க்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இது சாத்தியமானால் உலக வரலாற்றில் அதிகமானோர் பார்த்து ரசித்த 2-வது விளையாட்டு போட்டி என்ற பெருமை இந்த ஆட்டத்துக்கு கிடைக்கும்.
2014 உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை 100 கோடி பேர் ரசித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.