சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ், பாகிஸ்தானுக்கு வந்து மற்ற அணிகள் விளையாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ்,”இந்த வெற்றி இன்று மற்றும் நாளை நினைவு கூரத்தக்கது அல்ல. பல வருடங்கள் கொண்டாடத்தக்கது. பாகிஸ்தானில் கிரிக்கெட் இருக்கும் வரை இந்த சாதனை இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.
மேலும், ”நீண்ட நாட்களாக நாங்கள் துபாயை தான் ஹோம் கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். மற்ற அணிகளை போல் சொந்த மண்ணில் விளையாடும் சிறப்பு எங்களுக்கு இல்லை. இந்த வெற்றி மூலம் மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனவும் கூறினார்.
கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதிலிருந்து, அங்கு சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.