நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு தயாரிக்கப்படும் போது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட முடியாது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு எந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்படக்கூடாது என்ற சரத்தினை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்க வேண்டும் என கட்சி தீர்மானித்துள்ளது என அவர் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நாட்டில் மத வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வித மாற்றமும் இருக்கக் கூடாது என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஐக்கியம் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு சரத்தும் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படக்கூடாது என்ற திடமான நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சி வகித்து வருகின்றது.
மேலும், அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.