சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை தூண்டிவிடும் சவுதி அரேபியா அரசு தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த அவர்களை ஏவி வருவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாராளுமன்றம் மற்றும் முக்கிய மதத்தலைவராக திகழ்ந்த ஹயாத்துல்லா கமேனியின் சமாதி ஆகியவற்றின் மீது கடந்த 7-ம் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மனிதகுண்டு தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பழிக்கிப் பழி வாங்கியே தீருவோம் என்று சபதமேற்றிருந்த ஈரான் அரசு, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த டெய்ர் எஸார் பகுதியில் உள்ள சில முகாம்களின்மீது நேற்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் சிரியா ராணுவத்துடன் அதன் நட்பு நாடுகளான ரஷியாவும், ஈரானும் இணைந்து போரிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.