பிரித்தானிய தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு இழப்பீட்டு தொகையையும் அவற்றையும் பெற்றுக்கொள்ளும் இடங்களையும் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 58 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அவசர கால நிவாரணமாக 5 மில்லியன் பவுண்ட் நிதியை அறிவித்துள்ளது.
இவற்றில் ஒரு பகுதி வீடு இழந்தவர்களுக்கு வழங்கப்படும். வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 5,500 பவுண்ட் பணம் வழங்கப்படும்.
முதற்கட்டமாக, நேற்று முதல் 500 பவுண்ட் வீதம் வழங்கப்பட்டு வருவதாகவும் மீதி தொகையை லண்டனில் உள்ள Westway Centre மற்றும் Portobello Road ஆகிய பகுதிகளில் இன்று(திங்கள் கிழமை) பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
அதே சமயம், உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளுக்கு தேவையான பணத்தையும் உரிய அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கும் பணம் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது தலைமையிலான அரசு விரைவாக செய்து கொடுக்கும்’ என உறுதியளித்துள்ளார்.